197. அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் கோயில்
இறைவன் விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர்
இறைவி பெரிய நாயகி, கருணை நாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், இலட்சுமி தீர்த்தம், இந்திர தீர்த்தம்
தல விருட்சம் புன்னை மரம், சதுர கள்ளி, மகிழ மரம், குருந்த மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்புனவாயில், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருப்புனவாசல்' என்று வழங்கப்படுகிறது. அறந்தாங்கியிலிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirupunavayil Gopuramஇத்தலத்தின் தெற்கே பாம்பாறும், கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கடலும் உள்ளது. கடல் மற்றும் ஆற்றின் வாயிலில், அதாவது புனலில் உள்ளதால் இத்தலம் 'திருப்புனவாசல்' என்று பெயர் பெற்றது. தண்ணீருக்கு 'புனல்' என்ற ஒரு பெயரும் உண்டு. பிரம்மா தனது படைப்புத் தொழிலை மீண்டும் பெருவதற்கு இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து வழிபட்டார். அதனால் இத்தலம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இத்தலத்து மூலவர் 'பழம்பதிநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தற்போது 'விருத்தபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 'விருத்தம்' என்றால் 'பழமை' என்று பொருள்.

மூலவர் 'விருத்தபுரீஸ்வரர்', 'பழம்பதிநாதர்' என்னும் திருநாமங்களுடன், மிகப்பெரிய ஆவுடையுடன், உயரமான லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பெரிய நாயகி', 'கருணை நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். தமிழகத்திலேயே பெரிய ஆவுடை உள்ள லிங்க மூர்த்தி (82.5 அடி சுற்றளவு) இவர்தான். அதன் பொருட்டு 'மூன்று முழம் ஒரு சுற்று, முப்பது முழம் ஒரு சுற்று' என்ற சொல் வழக்கு இப்பதியில் உண்டு.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் ஆகண்டல விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜர், கஜலட்சுமி, பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயிலில் உள்ள காளி சன்னதி மிகவும் விசேஷம். இங்குள்ள நடராஜர் சபை 'சிவஞான சபை' என்று அழைக்கப்படுகிறது.

அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக் கோலத்தை காட்டியருளிய தலம். ஒருசமயம் தனது சக்தியை இழந்த அங்காரகன் இத்தலத்திற்கு வழிபட்டு தமது சக்தியை திரும்பப் பெற்றார்.

இக்கோயிலில் புன்னை மரம், சதுர கள்ளி, மகிழ மரம், குருந்த மரம் என்னும் நான்கு தல விருட்சங்கள் உள்ளன. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விருட்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களே நான்கு தல விருட்சங்களாக உள்ளதாகவும் கூறுவர்.

இக்கோயிலின் பிரகாரத்தில் 14 லிங்கங்கள் உள்ளன. இவை பாண்டி நாட்டில் உள்ள 14 தேவாரப் பாடல் பெற்றத் தலங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர், அங்காரகன், நான்கு வேதங்கள் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com